Enable Javscript for better performance
தாதுமணல் ஆலைகள் மீதான தடை உத்தரவை ரத்து  செய்யக்கோரி மனு தாக்கல்: அக்.25-க்கு விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தாதுமணல் ஆலைகள் மீதான தடை உத்தரவை ரத்து  செய்யக்கோரி மனு தாக்கல்: அக்.25-க்கு விசாரணை ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாதுமணல் ஆலைகள் செயல்பட தடை விதித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
     திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள   தாதுமணல் நிறுவன மின் மோட்டார்கள் மற்றும் உபகரணங்களுக்கு உரிமம் இல்லை எனக்கூறி அவற்றை அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
     இந்த உத்தரவை எதிர்த்து அந்நிறுவன நிர்வாக பங்குதாரர் எம்.சந்திரேசன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம் முன்பு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்தது. அதில் இருந்து பிரிந்தபோது மின் மோட்டார்களை இயக்குவதற்கான உரிமத்தை அந்நிறுவனத்தினர் எங்களிடம் வழங்கவில்லை. உரிமங்களைச் சமர்பிக்காததற்கு இதுவே காரணம். எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
     இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் குட்டம் பகுதியில் இயங்கி வரும் மற்றொரு தாதுமணல் ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி அந்நிறுவனத்தின் மேலாளர் எம்.கே.பசித் மனு தாக்கல் செய்திருந்தார்.
     இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.விமலா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, தாதுமணல் பிரித்தெடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது மட்டுமல்லாமல், மத்திய அணுசக்தி துறையிடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அனுமதியைப் பெறாமல் இந்த ஆலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்துள்ளன. அதோடு 1999 ஆம் ஆண்டு முதல் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இதன் அடிப்படையில் தான் சம்பந்தப்பட்ட ஆலைகளை மூட உத்தரவிடப்பட்டது என்று வாதிட்டார்.
     இதைத்தொடர்ந்து மனுதாரர்களின் வழக்குரைஞர் வாதிடுகையில், அணுசக்தி துறையிடம் இருந்து முறையான அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஆலைகளுக்காக பெறப்பட்ட உரிமம் நிரந்தர உரிமம் என்பதால் அதைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, ஆலைகள் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டு, வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai