Enable Javscript for better performance
மதுரையில் தடையை மீறி ரயில் மறியல் முயற்சி: 75 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் தடையை மீறி ரயில் மறியல் முயற்சி: 75 பேர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மதுரையில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் நடத்த முயன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     தமிழ்ப்புலிகள், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், விடுதலை சிறுத்தைகள், சட்டப்பஞ்சாயத்து இயக்கம், நாணல் நண்பர்கள் இயக்கம் உள்பட பல்வேறு இயக்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
     இதையடுத்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பாக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை காலை திரண்டனர். தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ஊர்வலமாகப் புறப்பட்டு ரயில் நிலையம் நோக்கி வந்தனர்.  ரயில் நிலைய வாயிலில் போலீஸார் தடுப்புகளை அமைத்து, அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ரயில் மறியலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், கலைந்து செல்லுமாறும் போலீஸார் கூறினர்.
     ஆனால், அமைப்பினர் அதை ஏற்க மறுத்து தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
    தபால் நிலையம் முற்றுகை: இதே கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தல்லாகுளம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலர் பிலால்தீன், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன், மாவட்டச் செயலர் கமால்பாட்ஷா உள்ளிட்ட 36 பேரை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai