சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு ஏராளமானோர் பால்குடம் எடுத்துவந்து பாலாபிஷேகம் செய்தனர்.
சோலைமலையில் வைகாசிவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. தினசரி மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. புதன்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவில், அப்பன் திருப்பதி மற்றும் சுற்று வட்டார கிராம முருக பக்தர்கள் பாத யாத்திரையாக பால்குடம் எடுத்து, அலகு குத்தி வந்தனர். சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர், தேன், புஷ்பம் உள்ளிட்ட பதினாறு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபாடுகள் செய்தனர். முருகனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வைர வேலுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
உலகநாதபுரத்தில்..: மேலூர் அருகில் உள்ள ஆட்டுக்குளம் உலகநாதபுரத்தில் அருள்மிகு சக்திவேல் முருகன் கோயில் உள்ளது. இங்கு, வைகாசி விசாகத்தை முன்னிட்டு காப்புக் கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், கருங்கல்லில் இருந்து ஊர்வலமாக வந்தனர். சக்திவேல் முருகனுக்கு பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
இடையபட்டியில்..:வெள்ளிமயில் வேல்முருகன் திருக்கோயில், கொட்டாம்பட்டி அருகே வெள்ளிமலை ஆகிய இடங்களிலும் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.