மதுரை மாவட்டத்தில் 3.72 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
பள்ளிகள் தொடங்கும் நாளன்றே பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மதுரையில் ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ என 2,583 பள்ளிகள் செயல்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் இப் பள்ளிகளில் மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேர் கல்வியைத் தொடங்கியுள்ளனர்.
இதில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 164 பேருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 22 பேருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 1.45 லட்சம் பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பள்ளி தொடங்கும் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களது கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண வேண்டும். கல்வியுடன் விளையாட்டு, போட்டித் தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் முருகானந்தம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி கல்வி அலுவலர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.