பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட மதுபானக் கடை விதிகளுக்குள்பட்டு கட்டப்பட்டதா என ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த எம். குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கு ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் சொந்தமான நிலம் உள்ளது. அங்கு. மதுபானக் கடை அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் என்னை அணுகினர்.
இதற்கு நான் ஒப்புக்கொண்டதையடுத்து, அப்பகுதியில் ரூ. 5 லட்சம் செலவில் மதுபானக் கடையை அமைத்தேன். இந்நிலையில், அந்தக் கடையை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், தங்களுக்கு பணம் தரவேண்டும் என்று சில அரசியல் கட்சியினர் மிரட்டினர். இதற்கு நான் மறுத்ததால், அப்பகுதி மக்களைத் தூண்டிவிட்டு கடையை அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்த வைத்தனர்.
பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து, அந்தக் கடையை அதிகாரிகள் தாற்காலிகமாக மூடினர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். என்னுடைய இடத்தில் அமைந்துள்ள மதுபானக் கடை அனைத்து விதிகளுக்கும் உள்பட்டு கட்டப்பட்டது. எனவே, அக்கடை அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து, கடையை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெ. நிஷாபானு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்குரைஞர் தூதை முனியசாமியை வழக்குரைஞர் ஆணையராக நியமித்து, மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.