மதுரை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
   சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எம்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதையடுத்து. சாலை மறியலில் ஈடுபட்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே, மதுரை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலர்கள் வ. வேலுச்சாமி, கோ. தளபதி ஆகியோர் தலைமை வகித்தனர். திமுக தீர்மானக் குழுத் தலைவர் பொன். முத்துராமலிங்கம், தணிக்கைக் குழு உறுப்பினர் பெ. குழந்தைவேல், முன்னாள் அமைச்சர் ஆ. தமிழரசி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம், எஸ்ஸார் கோபி, காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
   இப்போராட்டம் காரணமாக, பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. அதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 170 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்:    திருப்பரங்குன்றத்தில், பகுதிச் செயலர் கிருஷ்ணபாண்டியன் தலைமையில், வட்டச் செயலர்கள் எம்.ஆர்.பி. ஆறுமுகம், ரமேஷ், சாமிவேல், முன்னாள் ஒன்றியச் செயலர் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், திமுகவினர் 64 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை மாலையில் விடுவித்தனர்.
கொட்டாம்பட்டி:    திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடியில் அக்கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 40 பேரை கொட்டாம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக திமுகவினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், திமுக நகரச் செயலர் தங்கமலைபாண்டி, ஒன்றியச் செயலர் இ. சுதந்திரம், மாணவரணி பிரபு, மாவட்டப் பிரதிநிதி மாசாணம் மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய திமுகவினர் என பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 49 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com