நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி உத்தரவு: ஆட்சியர் வழங்கினார்

நீர்நிலைகளில் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி உத்தரவை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் புதன்கிழமை வழங்கினார்.
Published on
Updated on
1 min read

நீர்நிலைகளில் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி உத்தரவை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் புதன்கிழமை வழங்கினார்.
தமிழக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்ட குடிமராமத்துப் பணியைத் தொடர்ந்து, நீர்நிலைகளில் தூர்வாரப்படும் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, நன்செய் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 25 டிராக்டர் லோடு, புன்செய் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 30 டிராக்டர் லோடு, வீட்டு உபயோகத்துக்கு 10 டிராக்டர் லோடு, மண்பாண்டம் தயாரிக்கும் பணிக்கு 20 டிராக்டர் லோடு வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மண் எடுப்பதற்கு பொக்லைன் இயந்திர வாடகையாக கனமீட்டருக்கு ரூ. 35.20 வீதம் காசோலையாகப் பெறப்படும்.
   மாவட்டம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்துள்ளனர். முதல் கட்டமாக, மதுரை கிழக்கு மற்றும் மேலூர் வட்டங்களில் அனுமதி உத்தரவுகளை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
   பருவமழை தொடங்கும் முன்பாக நீர்நிலைகளை தூர்வாரி மழை நீரைச் சேமிக்கும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் மண்ணை வெட்டி எடுக்கும்போது, தரையின் மட்டம் கண்மாயில் உள்ள மடையின் அடிமட்டத்துக்கு கீழ் சென்றுவிடக் கூடாது. நீர்நிலைகளின் இயற்கைதன்மை மாறாத வகையிலும், பாசன விவசாயிகளின் விவசாயப் பணிகளுக்கு இடையூறு இல்லாமலும் கண்மாயிலிருந்து மண் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்.
   மதுரை கிழக்கு வட்டம் அயிலாங்குடி கண்மாய், மேலூர் வட்டம் குறிச்சிக்குளம் கண்மாய் ஆகியவற்றில் விவசாயப் பணிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியை ஆட்சியர் பார்வையிட்டார்.
  விவசாயிகள் மகிழ்ச்சி:  கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு  அனுமதி பெறுவது விவசாயிகளுக்கு சவாலான விஷயம். கனிமவளம், பொதுப்பணி, வருவாய் என பல்வேறு துறைகளின் அனுமதியைப் பெறவேண்டும். இதற்கு ஏராளமான விதிமுறைகளை அந்தந்த துறைகள் வகுத்து வைத்துள்ளன. இவற்றைப் பூர்த்தி செய்து அனுமதி பெறுவதற்குள் விவசாயிகள் துவண்டு போய்விடுவர்.
குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கிடைத்த அனுமதி தற்போது அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் விண்ணப்பித்து, அனுமதி உத்தரவு பெறும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலூர்: மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவை, வட்டாட்சியர் தமிழ்செல்வி மற்றும் வருவாய்த் துறையினர் வரவேற்றனர். அப்போது, கண்மாய் மற்றும் குளங்களில்  மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பித்திருந்த 11 நபர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவு நகலை ஆட்சியர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com