மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய தாலுகாக்களில் புதன்கிழமை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.
திருப்பரங்குன்றம், நிலையூர் 2-பிட், தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெகோபயாம் தலைமை வகித்தார்.
இதில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான 136 மனுக்கள் வரப்பெற்றன. அதில், முதியோர் உதவித்தொகை, உள்பட்டா மாறுதல் உள்ளிட்ட 15 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
மேலூர்: மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி, மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் பெனடிக் தர்மாராய் புதன்கிழமை தொடக்கி வைத்தார். இதில், மேலூர் பிர்காவுக்கான கோரிக்கை மனுக்களை வருவாய் கோட்டாட்சியர் பெற்றார். அதைத் தொடர்ந்து, கிராமக் கணக்குகளை அவர் ஆய்வு செய்தார். வியாழக்கிழமை மேலவளவு பிர்கா, வெள்ளிக்கிழமை கருங்காலக்குடி பிர்கா அளவிலான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 30-ஆம் தேதி கீழவளவு பிர்கா, மே 31-ஆம் தேதி திருவாதவூர் பிர்கா, ஜூன் 1 வெள்ளலூர் பிர்கா, ஜூன் 2 கொட்டாம்பட்டி பிர்கா, ஜூன் 6-இல் அ.வல்லாளபட்டி பிர்கா அளவில் ஜமாபந்தி நடைபெறும்.
இதில், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என, மேலூர் வட்டாட்சியர் சி. தமிழ்செல்வி தெரிவித்தார்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் வேலுசாமி ஜமாபந்தி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். இந்த ஜமாபந்தி, மே 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புதன்கிழமை, கருமாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிர்காக்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில், முழுப்புல பட்டா 49, உள்பிரிவு 78, முதியோர் உதவித்தொகை 51, கணினி திருத்தம் 3, நில ஆக்கிரமிப்பு 3 என மொத்தம் 231 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, 5 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக் கொள்ளும் உரிமம் வழங்கப்பட்டது. பின்னர், உசிலம்பட்டி வட்டாட்சியர் செ. ராமச்சந்திரன் முன்னிலையில், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை மாவட்ட வருவாய் அலுவலர் நட்டார்.
திருமங்கலம்: திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், மதுரை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் பங்கேற்று மனுக்களைப் பெற்றார். பின்னர், அந்த மனுக்களை உரிய அலுவலரிடம் வழங்கி, உடனடியாகத் தீர்வு காண உத்தரவிட்டார்.
முன்னதாக, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதில், வட்டாட்சியர் மலர்விழி மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
திருமங்கலம் தாலுகாவில் உள்ள குராயூர் உள்வட்ட கிராமங்களுக்கு வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில், இடையநத்தம், ஓடைப்பட்டி, மேலஉப்பிலிகுண்டு, டி.கொக்குளம், பேய்குளம், சென்னம்பட்டி, எஸ்.பி.நத்தம், பாறைக்குளம், திருமால், குராயூர் பிட்-1, பிட்-2, மருதங்குடி, எஸ்.வெள்ளாகுளம், கருக்குவாய்பட்டி, சுந்தரங்குண்டு, வேப்பங்குளம், இலுப்பகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.