திருப்பரங்குன்றம் செவந்திகுளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் குளம் அசுத்தமாகி அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை அருகே ஒரு கரையும், திருப்பரங்குன்றம் திருமலையூர் அருகே மறுகரையும் அமையப்பெற்றது செவந்திகுளம். இதன் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
விளாச்சேரி கால்வாய் வழியாக வரும் வைகை தண்ணீர் தனி கால்வாய் மூலம் செவந்திகுளத்திற்கு வரும். இந்தக்குளம் திருப்பரங்குன்றம், திருமலையூர் உள்ளிட்ட பகுதியினருக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.
மிகச்சிறிய குளம் என்பதால் சிறிய மழைக்கே தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும். தற்போது பெய்த தொடர்மழை காரணமாக குளத்தில் தண்ணீர் நிரம்பி வருகின்றது.
இந்நிலையில் குளத்திற்கு வரும் தண்ணீரில் திருப்பரங்குன்றம் பகுதி கழிவுநீர் கால்வாய் இணைக்கப்பட்டுள்ளதால் குளத்தில் உள்ள நீர் அசுத்தமடைவதாக இப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
மேலும் தண்ணீர் துர்நாற்றத்துடன் பாசி படர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் திருமலையூர் பகுதியில் உள்ளோர்களுக்கு காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறையினர் செவந்திகுளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.