தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக புதிய தேடல் குழுவை அமைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் கார்த்திக் பாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அவர் தாக்கல் செய்த மனு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், துணைவேந்தர் தேர்வு பாரபட்சமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் தேடல் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேடல் குழுவின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட தேடல் குழு, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக மூன்று பெயர்களை பல்கலை. வேந்தரான ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் நிராகரித்துவிட்டார். எனவே, இந்த தேடல் குழு கலைக்கப்பட்டு புதிய தேடல் குழு அமைக்கப்பட உள்ளது என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி, தகுதியான நபர்களைக் கொண்ட புதிய தேடல் குழு அமைத்து, துணைவேந்தரை தேர்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.