மதுரையில் மாணவி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி, சட்டக் கல்லூரி வாயிலில் துண்டுப்பிரசுரம் வழங்கிய மாணவர் சங்கத் தலைவர் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில், மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக வியாழக்கிழமை காலை நடைபெற உள்ள நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வேல்தேவா, புரட்சிகர மாணவர் முன்னணியின் நிர்வாகிகளான கணேஷ்குமார், தினேஷ்குமார் ஆகிய மூவரும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்லூரி முன்பு புதன்கிழமை பிற்பகலில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான தகவலின்பேரில், அங்கு சென்ற தெப்பக்குளம் போலீஸார், துண்டுப்பிரசுரம் விநியோகித்த மூவரையும் காவல் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளனர். இது தொடர்பாக மாணவர் அமைப்பினர், போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாணவர் அமைப்பினர் மூவரையும் போலீஸார் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி, தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு மூவரையும் போலீஸார் தாக்கியதால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், துண்டுப்பிரசுரம் வழங்கிய மாணவர்களை போலீஸார் கைது செய்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சட்டக் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துண்டுப்பிரசுரம் வழங்கியவர்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம், அண்ணாநகர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.