நல் வழிகாட்டும் நூல்கள் இறைவனுக்குச் சமம்: பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன்

மதுரையில் சித்திரைத் திருவிழா போல நடைபெறும் அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவில், நல்வழிகாட்டும் நூல்கள் இறைவனுக்குச் சமமாக
Published on
Updated on
2 min read

மதுரையில் சித்திரைத் திருவிழா போல நடைபெறும் அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவில், நல்வழிகாட்டும் நூல்கள் இறைவனுக்குச் சமமாக சங்கமித்திருக்கின்றன என, பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
      மதுரை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை நடைபெற்ற திரையிசையில் சிறந்தது எக்காலம்? எனும் தலைப்பிலான இசையரங்கத்தில், அவர் ஆற்றிய நடுவர் உரை:  மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் எம்பெருமான் அரக்கனை அழித்து மக்களுக்கு காட்சியளிப்பார். அதேபோல், இந்தப் புத்தகத் திருவிழாவில் அறநூல்கள் நமது மனங்களில் உள்ள அறியாமை குணங்களை அகற்றி நல்வழிகாட்டுகின்றன.
     மதுரை சித்திரைத் திருவிழாவில் மக்கள் சங்கமிப்பர். புத்தகத் திருவிழாவில் அறிவு நூல்கள் குவிந்திருக்கின்றன. சித்திரைத் திருவிழா கலாசார உணர்ச்சித் திருவிழாவாக இருக்கும். புத்தகத் திருவிழா அறிவு உணவுத் திருவிழாவாக உள்ளது. நல்வழிகாட்டும் புத்தகங்கள் இறைவனுக்குச் சமமானவையாகும்.
      இறைவனை குனிந்து வணங்கினால் வாழ்வில் நிமிர்ந்து நடக்கும் முன்னேற்றம் கிடைக்கும். அதேபோல், புத்தகங்களை குனிந்து படித்தால் வாழ்வில் நிமிர்ந்து நடக்கலாம்.  கலாசாரம், பண்பாடு காக்கும் கோயில் திருவிழாக்கள் போலவே நமது அறிவை மேம்படுத்துபவையாக புத்தகங்கள் உள்ளன.
     நல்ல சொற்களை தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் நிரப்பும் போது, சிறந்த கவிதைகள் பிறக்கும் என்பது பொதுவான கருத்து. எனவே, காலந்தோறும் கவிதைகள் மக்கள் நல் வழியில் செல்ல துணைபுரிந்து சிந்திக்க வைத்திருக்கின்றன என்றார்.
     கருத்தரங்குக்கு தலைமை வகித்த மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து பேசியது:       புத்தகத் திருவிழா மாவட்டத்தில் பல இடங்களில் நடத்தப்படுவது அவசியம். ஆசிரியர், மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தவிர்த்து பொதுவான அறிவுப் புத்தகங்களை படிக்கவேண்டும் என, கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவான புத்தகங்கள் வாழ்க்கையின் அனுபவங்களைத் தரும் என்றார்.
     நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றிய மதுரை சம்பளக் கணக்கு அலுவலக இணை இயக்குநர் கே.எஸ். முத்துப்பாண்டியன் பேசியது: மக்களிடையே சுயவிளம்பர மோகம் அதிகரித்துள்ளது. பொதுநல பார்வை குறைந்து விட்டது.  முகநூல், இணையம் போன்றவைகளால் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. புத்தக வாசிப்பு குறைந்ததால் பல பிரச்னைகளை இளந்தலைமுறையினர் சந்திக்கின்றனர் என்றார்.
     இசை அரங்கில் ஆசிரியர் ச. செந்தூரான், ரேணுகாதேவி மற்றும் ஜோதிகாராஜன்,  திருநாவுக்கரசு ஆகியோர் பாடல் பாடி பேசினர். அரங்கில் முத்து இசையமைக்க, ஞானம் தபேளா வாசித்தார். நடுவர் தா.கு. சுப்பிரமணியன் தனது தீர்ப்புரையில், அன்றைய திரையிசையும், இன்றைய திரையிசையும் வெவ்வேறு கருத்துகளை கூறினாலும் அவை மக்களால் விரும்பப்படுகின்றன என்றார்.
    முன்னதாக, மீனாட்சிபுத்தக நிலையம் செ. முருகப்பன் வரவேற்றார். அம்மன் சத்தியநாதன் நன்றி கூறினார்.

இன்றும்...
நாளையும்...
வியாழக்கிழமை (07.09.2017)
மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி.
கருத்துரை கூட்டம்,  வரவேற்புரை- சர்வோதய இலக்கியப் பண்ணை இணைச் செயலர் வே.புருஷோத்தமன், தலைமை-  உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாக இயக்குநர் கா.மு.சேகர், சிறப்புரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ஆர்.சொக்கலிங்கம், பொருள்- பேச்சும் எழுத்தும், கருத்துரைகள்- முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன்,  தலைப்பு- புத்தகமும் பேசும்,  எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன், தலைப்பு- வாசிப்பும் சுவாசிப்பும், நன்றி- பபாசி செயற்குழு உறுப்பினர் கே.பூபதி, தமுக்கம், மாலை 6.


வெள்ளிக்கிழமை (08.09.2017)
தெற்குவாசல் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி.
கருத்துரை கூட்டம்,  வரவேற்பு- புலம் பதிப்பகம் இ.லோகநாதன்,  தலைமை- கல்லூரி கல்வி இயக்குநரக இணை இயக்குநர் கூ.கூடலிங்கம், வாழ்த்துரை- விக்டோரியா எட்வர்டு மன்ற செயலர் ஐ.இஸ்மாயில், சிறப்புரை- அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், தலைப்பு- பாரதி வழியில் பைந்தமிழ்,  நன்றி- பெல்கோ பி.குருதேவ், மாலை 6.

வாசிப்பாளர்களும்வாங்கிய  புத்தகங்களும்
எம்.காளீஸ்வரி, கல்வியியல் கல்லூரி மாணவி, செல்லூர்: சுரதாவின் கவிதைகள் பிடிக்கும். அவரது கவிதைப் புத்தகங்களை வாங்கியுள்ளேன். உலகப் பெண் தலைவர்கள், இந்திய வரலாற்றில் சிறந்த பெண் தலைவர்கள் ஆகிய புத்தகங்களை வாங்கியுள்ளேன். பெண் எழுத்தாளர்கள் கட்டுரைத் தொகுப்பையும் வாங்கினேன்.

கே.துரைராஜ், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர், திருப்பரங்குன்றம்: கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் அவரது கவிதை நூல்கள், கட்டுரைகளை வாங்கியுள்ளேன். இயற்கை மருத்துவம், மார்க்சீயம் நூல்களையும் வாங்கிச் செல்கிறேன். காவல் துறை அதிகாரிகள் எழுதியுள்ள நூல்களையும் வாங்கியுள்ளேன்.

தா.ஆயிஷா, 6 ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, கோரிப்பாளையம்:  கதைப் புத்தகங்களை வாங்கியுள்ளேன்.  நீதிபோதனை புத்தகங்களை ஏற்கெனவே படித்திருந்தாலும், இங்கும் அதை வாங்கியுள்ளேன்.  வாங்கிய புத்தகங்களை படித்து அதன் கதைகளை அவ்வப்போது நண்பர்களுக்கும் கூறுவேன்.

எஸ்.ராமன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கருங்காலக்குடி:  நாற்பதாண்டுகளாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள் படைப்புகளை படித்து வந்துள்ளேன். குறிப்பாக, பாரதியார், பாரதிதாசன், டாக்டர் மு.வ. ஆகியோரது நூல்களை தற்போது வாங்கியுள்ளேன். எனது வீட்டிலும் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

சி.பாரதி, யோகா ஆசிரியை, புதூர்:  யோகா சம்பந்தமான நூல்களையும்,  ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களையும் வாங்கிச் செல்கிறேன். தமிழ் இலக்கியம் சம்பந்தமான புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.  தமிழ் இளங்கலை ஆய்வு செய்திருப்பதால் அது தொடர்பான நூல்களையும் வாங்கினேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com