மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் வசிக்கிறார். காரைக்குடி பகுதியில் ஊராட்சி பள்ளியில் தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்த இவர், அழகப்பா கல்லூரியில் பி.யூ.சி. முடித்து, மதுரை தியாகராஜர் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். அதையடுத்து, காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராக 34 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழியற்புல ஒருங்கிணைப்பாளர், மூன்றாண்டுகள் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும், ஓய்வுபெற்ற பிறகு இரு ஆண்டுகள் தகைசால் பேராசிரியராகவும் இருந்தார். சாகித்ய அகாதெமி ஆலோசனை மற்றும் பொதுக்குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்தார்.
இவர், இதுவரை எழுதிய 139 நூல்களில் 70 நூல்கள் விமரிசன நோக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டிமன்றம், தனிச்சொற்பொழிவு என மேடை திறனையும் வெளிப்படுத்தி வருகிறார். இலக்கிய, மேடைப் பேச்சு நிகழ்ச்சிகளுக்காக இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.
வெளிநாடுவாழ் தமிழ் சங்கத்தினருடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி, அதன்படி, தமிழ் இலக்கியப் பணியையும் தொடர்ந்து வருகிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டலில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் உள்ளிட்ட 36 பேர் இதுவரை முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ரா. மோகன், தான் சமீபத்தில் படித்த மறைந்த சரோஜாபாண்டியன் எழுதிய உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை எனும் நூலைப் பற்றி விமர்சிக்கிறார்.
மறைந்த சரோஜாபாண்டியன் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தனது முனைவர் பட்ட ஆய்வையே உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை என்ற நூலாக்கியுள்ளார். உலகில் உள்ள அனைத்து மதங்களும் குடும்ப வாழ்க்கை குறித்து எந்தவிதமான கருத்துகளை வெளிப்படுத்துகின்றன என்று விரிவாக நூலில் விளக்கியுள்ளார். குடும்ப வாழ்க்கையின் மேன்மை, பெற்றோர், குழந்தைகள் உறவு, பெற்றோர் கடமை என பல்வேறு கோணங்களில் மதங்களின் பார்வையில் குடும்ப வாழ்வை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக மதங்கள் அனைத்தும் குடும்ப வாழ்வை போற்றுவதையும், கருவில் இருக்கும் போதே குழந்தையை வழிநடத்தும் பொறுப்பு தாய், தந்தைக்கு இருப்பதையும் நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கு அறநெறி ஒழுக்கங்களை பெற்றோர் கற்பிக்கும் அவசியத்தை மதங்கள் வழி கருத்து மூலம் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருப்பது சிறப்பாகும்.
தற்போதைய தமிழ் இலக்கியங்கள் உலகப் பார்வையை மையமாக்கி நுண்ணிய ஆய்வு நோக்கில் படைக்கப்படுவது பாராட்டுக்குரியது. அழகை வியந்து பாராட்டி பாடிய காலம் போய், அழுக்குகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் புனைகளையும், புதுக்கவிதைகளும் தமிழில் அதிகம் படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முதியோர் அவலம், குழந்தைத் தொழிலாளர் என வாழ்வின் இருண்ட பக்கத்தையும் சமூகப் பார்வைக்கு இன்றைய எழுத்தாளர்கள் எடுத்துவைக்கின்றனர்.
உலக இலக்கியங்களுடன் தமிழ் மொழி இலக்கியத்தை ஒப்பிடும் போக்கும், தமிழ் உலக இலக்கியத்தில் எந்த வகையில் சிறப்படைகிறது என்ற பார்வையும் படைப்பாளிகள், விமர்சகர்கள் என அனைத்து இலக்கியத் தளத்திலும் இன்று பரந்து காணப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.