தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவையொட்டி, மதுரை அரசு மருத்துவமனையில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கவிதை, ஓவியம் உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.
மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்புக் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், கலந்துரையாடல் என பல்வேறு போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.
இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஓவியங்களை மாணவிகள் வரைந்தனர். மேலும் சிறப்பான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் கவிதைகளும் வாசிக்கப்பட்டன. இதில் சிறப்பான படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், குழந்தைகள் நலத்துறை இயக்குநர் பாலசங்கர், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.