மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழகத்தில் வரும் ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை அமலாகிறது. இதற்கு முன்னோட்டமாக மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடந்த ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தன்னைச் சந்திக்க வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுடன் வந்தால், அவற்றைப் பெற்றுக் கொண்டு துணிப் பைகள் வழங்குவதை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழக்கப்படுத்தியுள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை, கோப்பைகளுக்குப் பதிலாகத் துணிப் பைகள், சில்வர் டம்ளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, வாடிப்பட்டி வட்டம் சாணாம்பட்டியைச் சேர்ந்த புதிய மன்னர்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர், பிளாஸ்டிக் பைகளுடன் வந்த பொதுமக்களுக்கு துணிப் பைகளை வழங்கினர்.