மதுரை திருநகரில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை தெற்குவெளி வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது தாயார் பிரேமா. இவருக்கு திருநகர் சீனிவாசா நகர் 4-வது குறுக்குத்தெருவில் 5 சென்ட் நிலம் உள்ளது.
இதனை அதே பகுதியில் வசிக்கும் காளிமுத்து (39), கடந்த 2015-இல் போலியாக ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த சுரேஷ், காளிமுத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது, இடத்தை காலிசெய்து தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துவிட்டாராம். இந்நிலையில் சுரேஷ் திங்கள்கிழமை காலை திருநகர் வந்தபோது அவருக்கு காளிமுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் திருநகர் போலீஸார் வழக்குப்பதிந்து காளிமுத்துவை கைது செய்தனர்.