தனியார் நிறுவனத்துக்கு குடிநீர் வழங்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ஏ.கே.முகமது அப்பாஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
விராலிமலை பகுதியில் மாதத்துக்கு 2 நாள் மட்டும் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தற்போது விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் வடுகப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்துக்காக, முத்தரசநல்லூர் காவிரி குடிநீர் திட்ட இணைப்பிலிருந்து நாள் ஒன்றிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதனால் விராலிமலை முதல் ராமநாதபுரம் பகுதி வரை குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தனியார் நிறுவனத்துக்கு காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.