மதுரையில் தம்பதியை தாக்கிய 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், சக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேல்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி (34). இந்நிலையில் ஐராவதநல்லூர் எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த ராஜவேல் (34), காளீஸ்வரியிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதனை காளீஸ்வரி தனது கணவரிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, வேல்பாண்டி, ராஜவேலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேல்பாண்டி தனது மனைவியுடன் ஐராவதநல்லூர் கல்லம்பல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த ராஜவேல் இருவரையும் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர்கள் வேல்பாண்டி, காளீஸ்வரி ஆகிய இருவரையும் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக காளீஸ்வரி அளித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து, ராஜவேல், அவரது நண்பர்கள் காளிமுத்து (45), ராஜபாண்டி (24) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.