மதுரையில் கல்லூரி அருகே கஞ்சா விற்ற மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்லூரி அருகே சிலர் கஞ்சா விற்பதாக நாகமலை புதுக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சார்புஆய்வாளர் குமணன் தலைமையில் போலீஸார் அப்பகுதிக்குச்சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மூவர் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீஸார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்து விசாரித்தனர். இதில் உசிலம்பட்டி எருமார்பட்டியைச் சேர்ந்த ஆண்டி(45), கோச்சடையைச் சேர்ந்த முத்துமாயன்(39), ஆலம்பட்டியைச் சேர்ந்த போதுராஜா(18) என்பதும், மூவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.71 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.