மதுரைக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தியாகராஜர் ஆலை நிர்வாகி கருமுத்து தி.கண்ணன் கூறினார்.
மதுரையில் நான்கு நாள்கள் நடைபெற்ற சர்வதேச வேளாண் மற்றும் உணவுப்பொருள் வர்த்தகப் பொருட்காட்சியின் நிறைவு விழாவில் புதன்கிழமை அவர் பேசியது:
மதுரைக்கு சிறு, குறு தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்கு இதுபோன்ற பொருள்காட்சிகள் அவசியம். சென்னை-செங்கல்பட்டு இடையே உள்ள 60 கி.மீ. இடைவெளியில் மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அதிகளவிலான தொழில்கள் பெருகியுள்ளன. கனரக, மோட்டார் வாகனத் தொழில்கள் பெருமளவில் வந்துவிட்டன. இதனால் வட தமிழகத்தில் ஓரளவுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள பலருக்கு நிலங்கள் சொந்தமாக இருந்த காரணத்தால் சிறு,
குறு தொழில்களைப் புதிதாக தொடங்க உதவியாக இருந்தது.
சினிமா துறையின் வளர்ச்சியும் சென்னை மற்றும் வட தமிழகத்தை மட்டுமே சுற்றியுள்ளன. இதேபோல சமீபகாலங்களில் கோவை, திருப்பூரில் உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. சர்வதேச தொழில் முதலீடுகளை கவர்வதில் தான் நகரத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளது. ஆனால் மதுரையில் இதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவாக உள்ளது. இதில் நாம் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நம்மூரில் இருந்து மசாலா பொருள்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படவில்லை. தற்போது மேலை நாடுகளில் இந்திய மசாலா பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக சந்தை மதிப்பு உள்ளது.
இதை உணர்ந்து, சந்தை நுணுக்கங்களைக் கற்று சிறப்பாக செயல்பட்டால் ஏற்றுமதி தொழிலில் சிறக்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் மீன்பிடி துறைமுகமாக இருந்த சிங்கப்பூர் தற்போது உலகத்தின் முக்கிய வர்த்தக மையமாக உள்ளது. இவை அனைத்தும் விடா முயற்சியால் நிகழ்ந்த மாற்றங்கள். இதேபோல வேளாண்மையில் ஆர்வம் செலுத்தாத துபை போன்ற நாடுகள் உணவுப் பொருள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், மதுரையில் அனைத்து சாத்தியக்கூறுகள் இருந்தும் அதைப் பயன்படுத்த நாம் தவறி வருகிறோம். சரியான திட்டமிடல் இருந்தால்
மசாலா பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிகழத்தின் முக்கிய மையமாக மதுரையை மாற்ற முடியும் என்றார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேலு, தலைவர் என்.ஜெகதீசன், இளம் தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் வி.நீதிமோகன், குளோபல் நெட்வர்க் அமைப்பின் நிறுவனர் ஜெகத் ஷா, வைகை அமைப்பின் இயக்குநர் கே.பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.