தேர்வுத் தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுத் தாள் திருத்தும் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக, மதுரையில் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர் (ஜாக்டோ) அறிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுத் தாள் திருத்தும் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக, மதுரையில் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர் (ஜாக்டோ) அறிவித்துள்ளனர்.
      மதுரையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், போராட்டத்துக்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். முருகன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு தற்போது செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை திட்டத்தை கைவிடவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி கடந்த 21 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஏப்ரல் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுத் தாள்களை திருத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். முருகன் தெரிவித்தார்.
இதில், தமிழாசிரியர் கழக மதுரை மாவட்டத் தலைவர் செல்வராஜ்,  செயலர் ஜெயக்கொடி,  பட்டதாரி ஆசிரியர்கள் கழக மதுரை மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி - மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் முத்துப்பிள்ளை, நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன், சண்முகசுந்தரம்  உள்ளிட்டோர் தீர்மானத்தை விளக்கிப் பேசினர். 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com