Enable Javscript for better performance
"அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்கள் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்கள் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 09th February 2018 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற புராதன சின்னங்களை மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாதுகாக்க வேண்டும் என தென்மண்டல ஆலய ஆய்வுத்திட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் தி.கண்ணாபாபு தெரிவித்தார்.  
     சரசுவதி நாராயணன் கல்லூரியில், வியாழக்கிழமை கலாசார விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் தென்னிந்திய கோயில்களின் அமைப்பு மற்றும் புராதன சின்னங்கள் கண்காட்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு.கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கே.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கண்காட்சியை தென்மண்டல ஆலய ஆய்வுத் திட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் தி.கண்ணாபாபு தொடக்கி வைத்துப் பேசியதாவது:
     மின்சாரம், கட்டுமான உபகரணங்கள், இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் இல்லாத 2 ஆயிரம் வருடங் களுக்கு முன்பே மனித சக்தியின் மூலம் கோயில்கள் மற்றும் புராதன சின்னங்களை நம் முன்னோர்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். அவைகள் உலக அளவில் இன்றும் பாராட்டப்படுகின்றன. இவற்றை வேறு எங்கும் காண முடியாது. அவைகள் இந்திய கலை, கலாசாரத்தின் சின்னங்களாக விளங்குகின்றன. நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய கலை பொக்கிஷங்கள் பாதிக்குமேல் பராமரிப்பு இல்லாமல் அழிந்து விட்டன. மாணவர்கள் எந்த பாடத்தை வேண்டுமானாலும் படியுங்கள். அதேசமயத்தில் புராதன சின்னங்களையும், நமது கலாசாரத்தின் சின்னங்களையும் பாதுகாப்பதில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றார். 
       நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் சி.சாந்தலிங்கம் பேசியது: திருப்பரங்குன்றம், குரண்டி, கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் சமணர்களின் கல்விச் சாலைகள் இருந்துள்ளன. அதற்கான சான்றுகள் ஒவ்வொரு ஊரிலும் கல்வெட்டுகளாக உள்ளன. கிராமங்களில் உள்ள சிறுசிறு கோயில்களில் கூட அறிய பல தகவல்கள் கிடைக்கின்றன. எனவே அந்த கோயில்களையும், அங்குள்ள கல்வெட்டுக்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில் உதவி அகழ்வாராய்ச்சியாளர் எம்.பிரசன்னா வரவேற்றார். கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் எம்.ரவிச்சந்திரன், பேராசிரியர் என்.மீனாகுமாரி, தொல்லியல் துறை அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai