Enable Javscript for better performance
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருள்களின் காலத்தை அறியும் சோதனைக்கு அமெரிக்கா அனுப்பலாம்: உயர்நீதிமன்றம் கர- Dinamani

சுடச்சுட

    

    ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருள்களின் காலத்தை அறியும் சோதனைக்கு அமெரிக்கா அனுப்பலாம்: உயர்நீதிமன்றம் கருத்து

    By DIN  |   Published on : 09th February 2018 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்ட அகழாய்வு பொருள்களின் காலத்தை அறிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு சோதனைக்கு அனுப்பலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
     தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004 பிப்ரவரியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. 
    இந்த ஆய்வில் பல அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் இதுவரை நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படாததுடன், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
     எனவே இங்கு மீண்டும் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கவும், அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடவும், அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பொருள்களைக் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.காமராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
     இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்வதற்குத் தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
    அப்போது மத்திய தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்,  ஆதிச்சநல்லூர் ஆய்வு தொடர்பாக ஓய்வு பெற்ற தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படும் வசதிகளை செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். 
     அப்போது தொல்லியல் பொருள்களை கார்பன் சோதனைக்கு அனுப்புவது குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அதிக ஆழத்தில் எடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் சோதனைக்கு அனுப்பினால் மட்டுமே எவ்வளவு காலம் பழமையானது என்பதை சரியாக வரையறுக்க இயலும். ஆனால் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருள்களின் காலத்தை அறிவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் செலுத்தவில்லை. 
    ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருள்களை  கார்பன் பரிசோதனைக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு அனுப்பினால் அதன் பழமையை வரையறுத்து உறுதி செய்து கொள்ளலாம் என்று  கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai