Enable Javscript for better performance
தேர்தல் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் பதிலளிக்க உத்தரவு

    By DIN  |   Published on : 09th February 2018 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் நிபந்தனைகளுக்கு ஏன் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறித்து அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் பதிலளிக்கவும், தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
     மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் பாஸ்கர் மதுரம், தாக்கல் செய்த மனு:  நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் குற்றவியல் வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள், பார் கவுன்சிலில் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தவர்கள், அரசியல் கட்சி பொறுப்புகளில் உள்ளவர்கள் போட்டியிடக் கூடாது. 10 ஆண்டுகள் வழக்குரைஞர் தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதில் கடைசி 5 ஆண்டில் ஆண்டுக்கு 10 வக்காலத்து தாக்கல் செய்திருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
    இந்த நிபந்தனைகள் அகில இந்திய பார் கவுன்சில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இது சட்ட விரோதமாகும். பார் கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அகில இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் வழங்க மறுப்பது சரியல்ல. இந்த நிபந்தனைகள் அமல்படுத்தப்படாமல் போனால் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் பலர் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
    எனவே தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வழங்க அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் நிபந்தனைகளுக்கு ஏன் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறித்து அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் பதிலளிக்கவும்,  பதிலளிக்க தவறும்பட்சத்தில் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் உள்பட பொறுப்பில் இருப்பவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai