Enable Javscript for better performance
புதிதாக உருவாகிறது திருமங்கலம் வருவாய் கோட்டம்: இரு புதிய வட்டங்கள் ஏற்படுத்தவும் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    புதிதாக உருவாகிறது திருமங்கலம் வருவாய் கோட்டம்: இரு புதிய வட்டங்கள் ஏற்படுத்தவும் ஆலோசனை

    By DIN  |   Published on : 09th February 2018 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய உள்ளது.
     இம்மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், வாடிப்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் ஆகிய வருவாய் வட்டங்கள் உள்ளன. இவை மதுரை,  உசிலம்பட்டி, மேலூர் ஆகிய வருவாய்க் கோட்டங்களின் கீழ் செயல்படுகின்றன.
    புதிய வருவாய் கோட்டம்: உசிலம்பட்டி கோட்டத்தின்கீழ் 3 வட்டங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும்,  தலைமையிடத்தில் இருந்து 3 வட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கான சுற்றுவட்டாரப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளன. இந்நிலையில் உசிலம்பட்டி கோட்டத்தைப் பிரித்து திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய கோட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.
     கள்ளிக்குடி, செல்லூர் புதிய வட்டங்கள்...:   அதேபோல கள்ளிக்குடி மற்றும் மதுரை செல்லூர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருமங்கலம் வட்டத்தில் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,29645 பேர் உள்ளனர். 108 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் கள்ளிக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  பேரையூர் வட்டத்தில் தற்போது இருக்கும் தே.கல்லுப்பட்டி பகுதியை இணைத்து கள்ளிக்குடி வட்டத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
     அதேபோல,  மக்கள்தொகை அதிகமாக இருக்கும் வட்டமான மதுரை வடக்கு வட்டத்தை பிரித்து செல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இருப்பினும் ஏற்கெனவே மதுரை வடக்கு வட்டம் பிரிக்கப்பட்டு மதுரை கிழக்கு வட்டம் உருவாக்கப்பட்ட நிலையில்,  மீண்டும்  வடக்கு வட்டத்தை பிரிக்க வேண்டுமா என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
      திருமங்கலம் புதிய வருவாய்க் கோட்டமாக உருவாக்கும் போது அதன்கீழ் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி ஆகிய வட்டங்களைக் கொண்டு வரவும்,  பிற வட்டங்கள் தற்போது உள்ள வருவாய்க் கோட்டங்களிலேயே தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை வருவாய்க் கோட்டத்தின் எல்லை மிக அதிகமாக இருப்பதால்,  அதில் இடம்பெற்றிருக்கும் திருப்பரங்குன்றம் வட்டத்தை  திருமங்கலம் கோட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
    இதற்கான பரிந்துரைகளை மாவட்ட நிர்வாகம் தயாரித்து வருகிறது.  இதற்கான அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படக் கூடும் என்று வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai