Enable Javscript for better performance
மாநகராட்சிக்கு 63 தனியார் பள்ளிகள் ரூ.18 கோடி வரி பாக்கி- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சிக்கு 63 தனியார் பள்ளிகள் ரூ.18 கோடி வரி பாக்கி

    By DIN  |   Published on : 09th February 2018 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சிக்கு 63 தனியார் பள்ளிகள் ரூ. 18 கோடி வரி பாக்கி வைத்திருப்பதால், அதை வசூலிக்க முடியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
     மதுரை மாநகராட்சி சார்பில் சொத்துவரி, குடிநீர் மற்றும் குப்பை வரி என ஆண்டு தோறும் இரு முறை வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் 193 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்குள் மட்டுமே வருவாய் கிடைத்து வருகிறது.
     வரி வசூல் மற்றும் கடைகள் வாடகை,  வாகன காப்பகம், கழிப்பறைகள்  ஒப்பந்தம் விடுதல்  உள்ளிட்ட வருவாய்  மூலமே மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன்,  சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், குறிப்பிட்ட அரசு அலுவலகங்கள்,  தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் வரி வசூல் செய்யப்படாமல் சுமார் ரூ.128 கோடி வரை பாக்கி இருப்பதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
        மதுரையில் 118 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி வரை வரி வசூல் நடைபெற வேண்டும். 
      ஆனால், பெரிய தனியார் பள்ளிகள் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இதனால் பள்ளிகள் மூலம் மட்டும் வரவேண்டிய சுமார் ரூ.18 கோடி வசூலாக வில்லை. அதே போல, அரசு அலுவலகங்கள் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் பாக்கி வைத்திருப்பதாகவும், தனியார் விடுதிகள், நிறுவனங்களும் கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
     இதனிடையே மதுரையில் ஆண்டுதோறும் வரி பாக்கி வைத்திருக்கும் சாமானியர், நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளில் பாதாள சாக்கடையை அடைத்தும், குறிப்பிட்ட கடைகளுக்கு முன்னால் குப்பைத் தொட்டி வைத்தும் மாநகராட்சி அலுவலர்கள் வரியை வசூலிக்கின்றனர். ஆனால், கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருக்கும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள், நிறுவனங்களிடம் வரியை வசூலிக்க முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் திணறிவருகின்றனர்.
     இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியது: மாநகராட்சி வரி சீராய்வு மூலம் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களின் வரியை உயர்த்தி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் சார்பில் பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், ஆணையரிடம் முறையிட்டும் உள்ளனர். ஆகவே அவர்களிடமிருந்து வரியை வசூலிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் தான் வரிக்கான காசோலை வழங்கப்படும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai