Enable Javscript for better performance
மூணாறில் மதுரை போலீஸ் மீது தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    வழக்கு விசாரணைக்குச் சென்ற மதுரை சிலைமான் போலீஸார் மீது மூணாறு பகுதி தேயிலை எஸ்டேட் பணியாளர்கள் புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
        மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம் (42). இவர் மூணாறு எஸ்டேட் தொழிலாளர்களிடம் தவணைமுறையில் வீட்டு உபயோகப் பொருள்களை கொடுத்து பணம் வசூலித்துவந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூணாறு தனியார் தேயிலை எஸ்டேட்டின் கள அலுவலர் ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி சந்திரா ஆகியோரிடம் வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி ரூ.10 ஆயிரம் வசூலித்தார்.  ஆனால், பொருள்களைத் தரவில்லையாம். மேலும், தவணை முறைத்திட்டத்தில் குலுக்கலில் இருசக்கர வாகனம் பரிசாக விழுந்திருப்பதாக தமிழ்ச்செல்வம் கூறியுள்ளார். 
      அதற்காகவும் ஜெயப்பிரகாஷிடம் ரூ.12 ஆயிரம் பெற்றதாகக் கூறப்படுகிறது. 
        பணத்தைப் பெற்ற தமிழ்ச்செல்வம், பொருள்கள், பரிசைத் தராமல் ஏமாற்றியதாகக் கருதிய ஜெயப்பிரகாஷும், அவரது மனைவியும் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சக்கிமங்கலம் வந்து தமிழ்ச்செல்வத்தை அழைத்துச்சென்றுள்ளனர். மூணாறு பகுதியில் ஓரிடத்தில் தமிழ்ச்செல்வத்தை அடைத்துவைத்து அவரிடமிருந்த ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.92 ஆயிரத்தை அவர்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
     விடுவிக்கப்பட்ட தமிழ்ச்செல்வம் மதுரை திரும்பியதும், சிலைமான் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸார் அழகு, முருகன் ஆகியோர் மூணாறு சென்று விசாரித்தனர். மேலும்,  தமிழ்ச்செல்வம் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறும் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுக் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து தேயிலை எஸ்டேட் பகுதிக்கு ஜெயப்பிரகாஷையும், அவரது மனைவி சந்திராவையும் விசாரிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஜெயப்பிரகாஷ், சந்திரா உள்ளிட்டோர் மதுரை போலிஸாரை முற்றுகையிட்டதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 
        தகவலறிந்த தேவிகுளம் போலீஸார் விரைந்து வந்து மதுரை போலீஸாரை மீட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மதுரை போலீஸார் மூணாறு டாடா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. மதுரை சிலைமான் போலீஸார் தாக்கியதாகக் கூறி ஜெயப்பிரகாஷும், அவரது மனைவி சந்திராவும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். 
       இதுகுறித்து விசாரித்து வருவதாக தேவிகுளம் போலீஸார் மதுரை ஊரகக் காவல்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai