Enable Javscript for better performance
குரங்கணி தீ விபத்து சம்பவம்: முதல்கட்டமாக 73 பேரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    குரங்கணி தீ விபத்து சம்பவம்: முதல்கட்டமாக 73 பேரிடம் விசாரணை

    By DIN  |   Published on : 24th March 2018 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
    தேனி மாவட்டம், போடி குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 23) வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை அலுவலராக தமிழக அரசு நியமித்துள்ளது.
    இதையடுத்து தேனி மாவட்டத்துக்கு வந்த அதுல்ய மிஸ்ரா, வியாழக்கிழமை தீ விபத்து சம்பவம் நடந்த மலைப்பகுதியில் நடந்தே சென்று ஆய்வு செய்தார். 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை குரங்கணியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான வாட்ச் டவர், மலையேற்ற பயிற்சி செல்வதற்கு அனுமதி சீட்டு வழங்குமிடம், வனத்துறை சோதனை சாவடி, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார்.
    தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: பின்னர் குரங்கணி மலை கிராம மக்களிடமும் விசாரணை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
    குரங்கணி தீ விபத்து தொடர்பாக காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர்கள், நக்ஸல் தடுப்புப் படையினர், வன ஆர்வலர்கள், மீட்புப் பணிக்கு உதவிய கொழுக்குமலை, கொட்டகுடி கிராம மக்கள் உள்ளிட்ட 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    மேலும் சென்னை, ஈரோடு ஆகிய இடங்களுக்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படும். குரங்கணியில் ஆய்வு செய்தபோது இரண்டு மலையேற்ற பாதைகள் இருந்தாலும், குரங்கணி-டாப்ஸ்டேசன் பாதை மட்டுமே அனுமதிக்கப்பட்ட பாதை ஆகும். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற பாதை அனுமதிக்கப்படாத பாதை ஆகும்.
    விசாரணையில் முடிவில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். மதுரையை மையமாக வைத்து இப்பகுதி மாவட்டங்களில் அவசர காலத்தில் உதவுவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்து பிற மாநிலங்களில் எப்படி உள்ளது என விசாரித்து அதற்காக பரிந்துரைக்கப்படும். மேலும் வனத்துறையில் தீயணைப்பதற்கு நவீன சாதனங்கள் வழங்குதல், மலையேற்ற பயிற்சி செல்வதில் என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அதில் பயிற்சியும், அனுபவமும் பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மலையேற்ற பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் போடி பகுதிக்கு வந்து ஆய்வு செய்து, விசாரணை அறிக்கையை சமர்பிப்பேன் என்றார்.
    வாக்குமூலம் விடியோவில் பதிவு: காவல்துறை சார்பில் போடி டி.எஸ்.பி. பிரபாகரன், சார்பு ஆய்வாளர் ராஜலிங்கம் உள்ளிட்ட 14 பேர், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட 12 பேர், போடி தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட 9 பேர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 2 பேர், கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர், கிராம உதவியாளர்கள் 2 பேர் என மொத்தம் அரசு அலுவலர்கள் 41 பேர் வாக்குமூலம் அளித்தனர். கொழுக்குமலை தேயிலை தோட்ட மேலாளர்கள் ஜானி, உதவி மேலாளர் பிரதாப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் டி.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பெருமாள், சமூக ஆர்வலர்கள் அ.திருப்பதிவாசகன், ராமகிருஷ்ணன், முதுவாக்குடி கிராமத்தை சேர்ந்த 6 பேர், குரங்கணியைச் சேர்ந்த 10 பேர் என பொதுமக்கள் தரப்பில் 32 பேர் உள்பட மொத்தம் 73 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
    அவை விடியோவில் பதிவு செய்யப்பட்டது.
    அப்போது, 'காட்டுத் தீயை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வனப்பகுதியில் காட்டுத் தீயை அணைக்கவும், கட்டுப்படுத்தவும் நவீன வசதிகளை வனத்துறையினருக்கு ஏற்படுத்தி தரவேண்டும், குரங்கணி வனப்பகுதியில் தொலைத் தொடர்பு சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். வனத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என வாக்குமூலம் அளித்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    விசாரணையின்போது, முதன்மை வனப்பாதுகாப்பு அலுவலர் உதயன், மதுரை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராகேஷ்குமார், தேனி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுலர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள துணை வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று வாக்குமூலங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai