Enable Javscript for better performance
பார்வையற்ற குழந்தைகளுக்கு புதிய செயலிகள் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    பார்வையற்ற, பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புதிய செல்லிடப்பேசி செயலிகளை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
    இதுகுறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் குறைபார்வை ஆலோசனை மையத்தின் மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாவது: இக்கண் மருத்துவமனையில் குறை பார்வை ஆலோசனை மையம் 1999-இல் தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் 6000-க்கும் அதிகமான நோயாளிகள் பரிசோதிக்கப்படுகின்றனர். பார்வை மதிப்பீடு, குறையை தொடக்கத்திலேயே கண்டறிதல், வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள்ளத் தேவையான உபகரணங்களை வழங்குதல் மற்றும் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை இம்மையம் வழங்கி வருகிறது.
    இந்நிலையில் பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் மைண்ட் ட்ரீ தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இரண்டு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பார்வையற்ற குழந்தைகள் நூல்களை படிக்கும் வகையில் 'டிக்னிபை' என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்லிடப்பேசி மூலம் இயக்க முடியும். பிரெய்லி அல்லாத நூல்களை இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்யும்போது, அவை பிரத்யேக இயந்திரத்தில் ஒலி வடிவம் பெற்று ஒலி பெருக்கி மூலம் வார்த்தைகளாக தெரிவிக்கப்படும். அதை பார்வையற்ற குழந்தைகள் கேட்க முடியும். மேலும் குறை பார்வை பிரச்னை உள்ளவர்களுக்கு பொருள்களை பார்க்க முடியும். ஆனால் என்ன பார்க்கிறோம், என்பதை மூளை உணர முடியாது. மூளை மற்றும் நரம்பியல் பிரச்னைகளால் இந்த குறை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு விகாஸ் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்வை குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பான பயிற்சியை பெறமுடிவதுடன், அவர்களின் அறிவாற்றலையும் மேம்படுத்த முடியும் என்றனர்.
    இதைத்தொடர்ந்து இரு செயலிகளின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் ரோஸ்டோ ராவணன், பொது மேலாளர் ஆப்ரஹாம் மோசஸ் மற்றும் அரவிந்த் மருத்துவமனை அதிகாரிகள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai