Enable Javscript for better performance
மதுரை அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை: கூலித்தொழிலாளிக்கு மூளையில் கட்டி அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை: கூலித்தொழிலாளிக்கு மூளையில் கட்டி அகற்றம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிக்கு மூளை ரத்த நாளத்தில் உருவாகியிருந்த கட்டிகளை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை அகற்றியுள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சின்னபார்குளத்தைச் சேர்ந்த அழகு (38). கட்டுமான தொழிலாளியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்துள்ளது. பணியில் ஈடுபட்டிருக்கும்போது அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிடத்தில் வலிப்பு ஏற்பட்டு அழகு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அவரை சேர்த்துள்ளனர்.
    அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் அடிக்கடி வலிப்பு வந்ததை அடுத்து கடந்த மாதம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழகுவை அழைத்து வந்துள்ளனர். அரசு மருத்துவனையில் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் அழகுவை பரிசோதித்ததில் முன் மூளை ரத்தநாளத்தில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாகவே அவருக்கு அடிக்கடி மயக்கம், வலிப்பு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை டீன் டி.மருதுபாண்டியன் உத்தரவின்பேரில் அழகுவுக்கு ரத்த நாளக்கட்டி அகற்றும் சிகிச்சை மைக்ராஸ்கோபிக் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்டது. மூளை மற்றும் நரம்பியல் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் ஸ்ரீசரவணன், மோகன்ராஜ், சுதாகர், நிபன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அழகுவுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மூளை ரத்தநாளத்தில் இருந்த கட்டிகள் அனைத்தும் அகற்றினர்.
    இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.6 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப்பிறகு நோயாளி சில வாரங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றனர்.
    அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள அழகுவுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai