Enable Javscript for better performance
மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் பாலத்துக்கு  நில ஆர்ஜிதத்தால் பாதிப்பு: வியாபாரிகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் பாலத்துக்கு  நில ஆர்ஜிதத்தால் பாதிப்பு: வியாபாரிகள் மனு

    By DIN  |   Published on : 24th March 2018 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை - நத்தம் சாலையில் பறக்கும் பாலம் கட்டுவதற்கான நில ஆர்ஜித நடவடிக்கையை, வியாபாரிகளைப் பாதிக்காமல் மேற்கொள்ளுமாறு விவசாயிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
    மதுரை - நத்தம் சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நான்கு வழிச் சாலையாக மாற்றுகிறது.
    அதோடு, இச் சாலையில் பி.டி.ஆர். சிலை சந்திப்பு முதல் செட்டிகுளம் வரை 7.3 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    இதையொட்டி சாலையின் இரு பகுதிகளிலும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. ஆர்ஜிதம் செய்யப்படும் இடங்களில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் இருப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக அய்யர்பங்களா வர்த்தக சிறுதொழில் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
    இதுகுறித்து வியாபாரிகள் நலச் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
    மதுரை - நத்தம் சாலையில் மாநகரப் பகுதியை உள்ளடக்கிய நாகனாகுளம், அய்யர்பங்களா, எழில் நகர், கிருஷ்ண நகர், திருப்பாலை, பொறியாளர் நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகள், உணவகம், வணிக நிறுவனங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் சிறுவியாபாரிகள். நத்தம் சாலையில் சுமார் 7 கி.மீ.-க்கு பறக்கும் பாலம் கட்டுவதற்கு 16 ஆயிரத்து 372 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தற்போது நாகனாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
    மதுரை மக்கள் என்ற முறையில் பாலம் அமைவதை வரவேற்கிறோம். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பாலம் அமைக்க முக்கியத்துவம் கொடுக்காமல், நெரிசல் இல்லாத, தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அதிகம் இல்லாத, பயன்பாடு குறைவான சாலைக்கு அதிக நிதியைச் செலவிடுவது சரியான செயல்பாடாகத் தெரியவில்லை.
    இருப்பினும் அரசின் திட்டத்தை எதிர்க்கவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைகள் வியாபாரிகளைப் பாதிக்கும் வகையில் உள்ளது. வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai