Enable Javscript for better performance
கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம் திட்டம் விரைவில் அமல்- Dinamani

சுடச்சுட

  

  கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம் திட்டம் விரைவில் அமல் 

  By DIN  |   Published on : 31st March 2018 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
  அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடிகளுக்கான இலவச திருமண விழாவில்  முதல்வர் பேசியது:
     ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் உதவி, அந்த குடும்பத்தையே காக்கும் என்ற அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினார். திருமண உதவித் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 23 ஆயிரத்து 783 குடும்பங்கள் பயன்பெற்றிருக்கின்றன. மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.58.15 கோடி செலவில் 217.616 கிலோ தங்கம், ரூ.177.66 கோடி நிதி உதவி 49 ஆயிரத்து 754 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் உதவித் தொகை
  ரூ.18 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.4 ஆயிரம் மதிப்பில், அம்மா தாய்-சேய் நல ஊட்டச் சத்து பெட்டகம்  கர்ப்ப காலத்தில் இருமுறை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 46 லட்சத்து 61 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெறுவர்.  அம்மா மகளிர் இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 3.36 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் 2017-18-இல் 4 ஆயிரத்து 328 மகளிருக்கு ரூ.10.82 கோடி மானியமாக வழங்கப்பட உள்ளது.  இதைப்போல பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
   அரசியல் காலியிடம் இல்லை: இல்லற வாழ்வைத் தொடங்கும் மணமக்கள், ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ வேண்டும். மாறான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் வெற்றிபெற நற்சிந்தனையோடு இருவரும் உழைத்து மேன்மை அடைய வேண்டும். வீண் சஞ்சலத்துக்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில்கூட கவலைப்பட்டு வாழ்வை வீணடிக்காமல் துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
    தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறி சிலர் புறப்பட்டுள்ளனர். ஆனால் இங்கே அப்படி வெற்றிடம் ஏதும் ஏற்படவில்லை. அவர்களுக்கு இடம் வேண்டும் என்றால் அவர்கள் வேறு மாநிலத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
    நவீன பேருந்து நிலையம்: மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக காளவாசல் சந்திப்பில் ரூ.54 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். பரவை - கோரிப்பாளையம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடியில் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். ரூ.51 கோடியில் மதுரை  -அழகர்கோவில் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றவும், வைகை வடகரை குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் வரை பாலம் அமைக்கவும் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
   திப்பம்பட்டி முதல் நகரி வரை 31 கிமீ உள்வட்டச் சாலை, பழங்காநத்தத்தில் 6 வழித்தட ரயில்வே மேம்பாலம், திருமங்கலம் அருகே குண்டாறு - செளண்டாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், கோரிப்பாளையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் முதல் யானைக்கல் வரை உயர்மட்டப் பாலம் ஆகிய திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
   உத்தங்குடி முதல் கப்பலூர் வரை 27.2 கிமீ மதுரை சுற்றுச்சாலை ரூ.214 கோடியில் நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. மதுரையில் விமானநிலையம்  (அண்ழ்ல்ர்ழ்ற்) இருப்பதைப் போல நவீன பேருந்து நிலையம் (ஆன்ள்ல்ர்ழ்ற்) விரைவில் தொடங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இடநெருக்கடியைப் போக்க கூடுதல் கட்டடத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மதுரை மாநகர மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, ரூ.1350 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மணவிழா, பெரும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் திமுக சார்பில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இங்கே வந்த கூட்டம் கூட மாநாட்டில் இல்லை என்றார் முதல்வர்.

  வாழ்வில் வெற்றி பெற...
   மணமக்களுக்கு ஆசி வழங்கிய முதல்வர், வாழ்வின் வெற்றிக்கான வழி குறித்த குட்டிக் கதையைக் கூறினார்.  ஒரு ஞானியைக் கண்ட சுண்டெலி, எனக்கு பூனையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது, என்னை பூனையாக மாற்றிவிடுங்கள் என்றது. அதன்படி, பூனையாக மாற்றினார். மீண்டும் ஞானியிடம் வந்த பூனை,  என்னை நாய் எப்போதும் துரத்துகிறது. ஆகவே, நாயாக மாற்றிவிடுங்கள் என்றது. அவரும் நாயாக மாற்றிவிட்ட நிலையில், சில காலம் கழித்து ஞானியிடம் வந்த நாய், எனக்கு புலியால் ஆபத்து வருகிறது. ஆகவே, புலியாக மாற்றுங்கள் என்றது. அதன்படி மாற்றிய பிறகு, எனக்கு மனிதர்களால் ஆபத்து என்னை மனிதனாக மாற்றிவிடுங்கள் என்றது.  அப்போது இடைமறித்த ஞானி,   உருவம் மாறினாலும்,  உள்ளத்தால் நீ சுண்டெலி தான். பயம் உன்னை விட்டு போகாது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறினார்.
     ஆக, உள்ளத்தில் தன்னம்பிக்கை, உயர்ந்த எண்ணம், அச்சமற்ற தன்மை உள்ளவர்கள எதையும் சாதிக்க முடியும். தன்னம்பிக்கையும், நற்சிந்தனையும் வாழ்வை வானளவுக்கு உயர்த்தும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai