Enable Javscript for better performance
சந்தையூர் சுவர் பிரச்னை: மலையில் குடியேறியவர் சாவு: போலீஸார் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சந்தையூர் சுவர் பிரச்னை: மலையில் குடியேறியவர் சாவு: போலீஸார் குவிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவரை அகற்ற வலியுறுத்தி மலையில் குடியேறி போராட்டம் நடத்திவருபவர்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
         மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூர் ராஜகாளியம்மன் கோயிலை சுற்றியுள்ள பொதுப்பயன்பாட்டு நிலத்தில் ஒரு பிரிவினர் சார்பில் கடந்த 2013-இல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து சுவரை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள தேன் மலையாண்டி கோயில் மலையில் குடியேறும் போராட்டத்தை ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கினர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. சுவரை இடிக்காமல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அறிவித்து 70 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மலையிலேயே தங்கியுள்ளனர். இப்போராட்டம் இரண்டு மாதங்களாக தொடர்ந்து வருகிறது. 
     இந்நிலையில், மலையில் குடியேறியவர்களில் கூலித்தொழிலாளியான பழனிமுருகன்(45) வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பழனிமுருகனின் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனி முருகனுக்கு மனைவி, இரண்டு ஆண், 1பெண் குழந்தைகள் உள்ளனர்.
        இதுதொடர்பாக போராட்டக்குழுவினர் கூறியது: கடந்த 2 மாதங்களாக பனி, மழை, வெயில் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தி வருகிறோம். சரியான உணவு, உறக்கம் இன்றியும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். இதனால் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 
    இதில் பாதிக்கப்பட்ட பழனிமுருகன் இறந்து விட்டார். ஆனாலும் சர்ச்சைக்குரிய சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகம் மறுக்கிறது. சுவரை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.  இந்நிலையில் பழனி முருகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வர இருப்பதாலும், பழனி முருகனின் உடலை ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்ய போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாலும் சந்தையூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai