Enable Javscript for better performance
ரயில் பெட்டிகளில் "சார்ட்' ஒட்டும் முறை நிறுத்தம்: பயணிகள் அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பெட்டிகளில் "சார்ட்' ஒட்டும் முறை நிறுத்தம்: பயணிகள் அதிருப்தி

    By DIN  |   Published on : 31st March 2018 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில் பெட்டிகளில் முன்பதிவுகளில் பயணிகளின் இருக்கை விவரப் பட்டியல் (சார்ட்) ஒட்டப்படும் நடைமுறை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
     ரயில்களில் பயணிக்கும் பயணிகள் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒட்டுவதால் ஏற்படும் செலவைக் குறைக்கும் வகையில், அந்த வழக்கத்தை நிறுத்துவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இத்திட்டம் சோதனை முயற்சியாக தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட ஏ 1 மற்றும் ஏ அந்தஸ்து பெற்ற ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏ 1 அந்தஸ்துடைய மதுரை ரயில் நிலையத்தில் இந்த நடைமுறை மார்ச் 1 -ஆம் தேதி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. 
     இதன்படி, மதுரை ரயில் நிலையத்துக்கு வரும் விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவு செய்து, பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட பயணிகளின் விபரங்கள் ரயில் பெட்டிகளில் பட்டியலாக ஒட்டப்படாது. 
    மாறாக பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட பயணிகள், காத்திருப்பு பட்டியிலில் உள்ள பயணிகள் விபரங்கள் அடங்கிய பட்டியல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள தகவல் மையத்தின் அருகே ஒட்டப்படுகிறது. இந்த நடைமுறையும் சில காலத்திற்கு மட்டுமே பின்பற்றப்படும் என்றும் பின்னர் செல்லிடப்பேசியில் வரும் குறுஞ்செய்தியின் மூலம் மட்டுமே பயண விபரங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
     பயணிகள் விபரம் அடங்கிய பட்டியல் கிழக்கு பிரதான நுழைவு வாயில் அருகில் உள்ள தகவல் மையத்தின் அருகில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மேற்கு நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாயில் வழியாக கடைசி நேரத்தில் அவசரத்தில் வரும் பயணிகள், பட்டியலைத் தேடி பிரதான நுழைவு வாயிலுக்குச் சென்று திரும்புவது என்பது இயலாத காரியம். இரவு நேரத்தில் பயணங்களை மேற்கொள்ளும் முதியவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றுவது சிரமம். 
    இதுதொடர்பாக ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் கேட்டாலும் அவர்கள் முறையான பதிலளிப்பதில்லையாம். செல்லிடப்பேசி தகவலை சரிபார்க்கவும், பிரதான நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ள பட்டியலை சரி பார்க்கவும் பயணிகளை பயணச்சீட்டு பரிசோதகர்கள் அறிவுறுத்துகின்றனராம். 
     இதுகுறித்து தெற்கு ரயில்வே பயணிகள் நலச்சங்க பொதுச்செயலர் கே.பத்மநாதன் கூறியதாவது:
     ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவு தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததல்ல. தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது, ஆனால், அதைப் பயன்படுத்தும் மனநிலைக்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை. மதுரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் பயணிகள் நிலையை குறிப்பாக முதியவர்கள் நிலையை ரயில்வே நிர்வாகம் யோசித்திருக்க வேண்டும். செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் அனுப்பப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியிருக்கும் பதில் ஏற்புடையதல்ல. ரயிலில் பயணிக்கும் அனைவரிடமும் செல்லிடப்பேசி இருக்கும் என்பதில் நிச்சயமில்லை.
     எனவே ரயில் பெட்டிகளில் பட்டியல் ஒட்டும் நடைமுறை மீண்டும் பின்பற்றப்பட வேண்டும், ரயில் நிர்வாகத்தின் இந்த முடிவு குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பின்னர் இந்த நடைமுறையை சில காலம் கழித்து அமல்படுத்தலாம் என்றார்.
     இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: பரிசோதனை முயற்சியில் மூன்று மாதங்களுக்கு தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் முறைக்கு மக்களைப் பழக்கப்படுத்தும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. பயணிகள் பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
     அவற்றை ரயில்வே நிர்வாகமும் பரிசீலித்து வருகிறது. டிஜிட்டல் முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai