Enable Javscript for better performance
திருச்சி சிறை காவலர்களை பெண் கைதி தாக்கினார்: உயர்நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் பதில்: மருத்துவ ஆவணங- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி சிறை காவலர்களை பெண் கைதி தாக்கினார்: உயர்நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் பதில்: மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    By DIN  |   Published on : 18th May 2018 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி பெண்கள் சிறையில் தாக்கப்பட்ட கைதியை மீட்டு ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில், காவலர்களை கைதி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான மருத்துவ ஆவணங்களை சிறைத்துறை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
       மதுரை வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த பி.அழகுதேவி தாக்கல் செய்த மனுவில்,  எனது கணவர் வழக்குரைஞர் ஏ.முருகன். மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு உதவியதாக 2017 ஜனவரியில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் தொடர்புடைய சந்திரா என்பவரும் கைது செய்யப்பட்டு திருச்சிப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சிறை அதிகாரிகள் சிலர் சந்திராவைத் தனிமைச் சிறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். 
    இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன். மனுவை விசாரித்த நீதிமன்றம், சந்திராவின் நிலை குறித்து விசாரிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்தது. வழக்குரைஞர் ஆணையர் அறிக்கையில் சந்திரா தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த சிறை நிர்வாகம், சிறை வளாகத்தில் சந்திரா உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
    ஆனால், அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்தது.
     இந்நிலையில், மே 12 ஆம் தேதி சிறையில் உள்ள சந்திராவைச் சந்தித்தேன். அப்போது அவர், வழக்கு தொடர்ந்த காரணத்தால் சிறை அதிகாரிகள் தன்னை மீண்டும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் தாக்கியதில் அவரது முகம், கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.  எனவே சந்திராவை மீட்டு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தவும், சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
     இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிறை நிர்வாகத்தின் தரப்பில், சந்திரா  சிறைக்காவலர்களை தாக்கியதாகவும், இதனால் காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கைதியை சிறை நிர்வாகம் தாக்கியதாக தான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவலர்களை, கைதி தாக்கியதாகத் தெரிவிக்கிறீர்கள். 
    எனவே காவலர்களுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை மே 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai