கட்டாய திருமணத்தை தடுத்த பிளஸ் 1 மாணவி

மதுரையில் தனக்கு நடைபெறும் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று

மதுரையில் தனக்கு நடைபெறும் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளஸ் 1 மாணவி அளித்தப்புகாரின்பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரு வீட்டாரையும் அழைத்து திருமணம் நடத்தமாட்டோம் என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு எச்சரித்து விடுவித்தனர்.
மதுரை வைகை வடகரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், உறவினரின் மகனுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. திருமணத்துக்கு உரிய வயது இல்லாததாலும், தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதாலும் மாணவி தனது திருமண ஏற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருமண ஏற்பாடுகளை நிறுத்தும்படி தனது பெற்றோரிடமும், மணமகன் வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவியின் எதிர்ப்பை இரு தரப்பினரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் திருமண ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி உரிய திருமண வயது  இல்லாத நிலையில் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருப்பதாகவும், திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 
 மேலும் மதுரை மதிச்சியம் காவல்நிலையத்துக்கும் வெள்ளிக்கிழமை சென்று புகார் அளித்தார். அதன்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த அமைப்பினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள்,  மாணவி வசிக்கும் பகுதிக்குச்சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். 
அப்போது மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதிச்சியம் காவல்நிலையத்துக்கு மாணவியின் பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோர் வெள்ளிக்கிழமை இரவு வரவழைக்கப்பட்டனர். அங்கு மாணவி சட்டப்படியான திருமண வயதை அடையாமல் அவருக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் திருமணம் நடந்தால் மணமகன் மற்றும் பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக இரு குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
 இதைத்தொடர்ந்து சட்டப்படி உரிய வயது வராமல் மாணவிக்கு திருமணம் செய்யமாட்டோம் என்று இரு குடும்பத்தினரிமும் எழுத்துப்பூர்வமாக உறுதி மொழியை வாங்கிக்கொண்ட போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் மாணவிக்கு உரிய பாதுகாப்பும் அளிப்பதாகவும், அடிக்கடி கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 
மேலும் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தனியாக காவல்நிலையம் சென்று புகார் அளித்து போலீஸார் உதவியுடன் திருமணத்தை தடுத்து நிறுத்திய மாணவியை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com