முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை: மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள், திமுக, காங். கட்சியினர் 800 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் திங்கள்கிழமை முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் திங்கள்கிழமை முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது.  இருப்பினும்   பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் மறியல், முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர், திமுக, காங்கிரஸ் கட்சியினர் 800 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமை வகித்தார். 
 இதில், திமுக மதுரை மாநகர் மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, உறுப்பினர் வ.வேலுச்சாமி மற்றும் மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல்தியாகராஜன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன்,  மாநில தொழிற்சங்க செயலர் மகபூப்ஜான், மதச்சார்பற்ற ஜனதாளம் மாநிலப் பொதுச்செயலர் க.ஜான்மோசஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சிகளான பார்வர்டு பிளாக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டனர். 
 மீனாட்சி பஜார் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன் தலைமை வகித்தார். எஸ்யூசிஐ கட்சியின் அமைப்பாளர் வால்டேர், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி நந்தாசிங், விடுதலை சிறுத்தைகள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தொடக்கி வைத்தார். 
 அதையடுத்து கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு சேதுபதி பள்ளி அருகே உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு போலீஸார் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் கட்சியினர் தடுப்புகளைத் தாண்டி தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார் கட்சி நிர்வாகிகள் ஒரு சிலரை பிடித்துச்சென்றதால் போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தபால் நிலையம் முன்பாக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரியார் பேருந்து நிலையம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போலீஸார் முற்றுகை மற்றும் மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். 
போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிலர் பெட்ரோல் விலை உயர்வை சித்தரிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றி கோஷமிட்டவாறு வந்தனர். இதையடுத்து போலீஸார் மாட்டுவண்டி மற்றும் மாடுகளை பறிமுதல் செய்தனர்.
ஊரகப்பகுதிகளில் மறியல் போராட்டம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேவர் சிலை பகுதியில் மறியலில் ஈடுபட்ட 130 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநகரில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 28 பேர், திருப்பரங்குன்றம்  ஹார்விப்பட்டியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 64 பேர், வளையங்குளம் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 40 பேர், அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 22 பேர், உசிலம்பட்டியில் 118 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 யா.ஒத்தக்கடை, மேலூர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, தே.கல்லுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 87 பெண்கள் உள்பட 586 பேரை போலீஸார் கைது செய்தனர்.
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்: கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். இருசக்கர வாகனத்தை மூன்றுசக்கர சைக்கிளில் ஏற்றி அதை மாடுகள் போன்று வேடமணிந்து இழுத்துச்சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லை: இப்போராட்டம் காரணமாக மதுரையில் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசுப்பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல ஓடின. மதுரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கபோல இயங்கின. 
 முழுஅடைப்பையொட்டி மதுரை மாநகரக்காவல் ஆய்வாளர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com