கோ.புதூரில் நூலகக் கட்டட பணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கோரிக்கை
By DIN | Published on : 12th September 2018 09:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரை கோ.புதூரில் நூலகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வாசகர் வட்டத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வாசகர் வட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாண்டிதுரை ஆகியோர், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து, அவர்கள் கூறியது:
மதுரை கோ.புதூரில் உள்ள கிளை நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் சொந்த கட்டடம் கட்டுவதற்கு, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து கோ.புதூர் பகுதியில் 910 சதுர அடி நிலத்தை கிளை நூலகம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கி, 2016 டிசம்பர் 8-இல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் 2 ஆண்டுகளுக்குள் மேற்படி நிலத்தில் நூலகக் கட்டடம் கட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், வருவாய்த் துறை மீண்டும் நிலத்தை தன்வசம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி கிளை நூலகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டுமானப் பணியைத் தொடங்க நிர்வாக அனுமதி கோரி நூலகத்துறை இயக்குநருக்கு, மதுரை மாவட்ட நூலக அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நிர்வாக அனுமதி கிடைத்தால் மட்டுமே பொதுப்பணித் துறை மூலமாக மதிப்பீடு, வரைபட அனுமதிக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், நிர்வாக அனுமதி அளிக்க தாமதம் ஆவதால், நூலகத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்ட உத்தரவு காலாவதியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, நூலகக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தரவேண்டும் என்றனர்.