மந்தநிலையில் மதுரை-போடி அகல ரயில்பாதை பணிகள்!

மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
   மதுரை-போடி மீட்டர்கேஜ் வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டப் பணிகளை 2015 ஆம் ஆண்டுக்குள் முடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  தண்டவாளங்கள்  அகற்றப்பட்டு செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வள்ளல்நதி உள்ளிட்ட ரயில் நிறுத்தங்களும் அகற்றப்பட்டன.  8-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய பாலங்கள் அமைகின்றன. 
  இத் திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் சொற்ப அளவிலான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப கூட பணிகள் நடைபெறவில்லை. மேலும், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் தட்டுப்பாட்டால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே இத்திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.207 கோடியில் இருந்து ரூ.320 கோடியாக உயர்ந்தது. திட்ட செலவீனம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கிய நிதியில் இதுவே அதிகமானது. இந்த நிதி மூலம் மதுரை- உசிலம்பட்டி வரையிலான பாதையை முழுவதுமாக முடிக்க ரயில்வே பொறியியல் பிரிவு திட்டமிட்டுள்ளது. 2019 மார்ச் மாதத்துக்குள்  பணிகளை முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெறுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  தேனி மாவட்டத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாதையான மதுரை-போடி பாதையில் மட்டுமே தற்போது ரயில் போக்குவரத்து இல்லை. இதைக் கருத்தில் கொண்டு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 இதுகுறித்து மதுரை மாவட்ட நஞ்சை-புஞ்சை நில விவசாயிகள் சங்கத் தலைவர் பி.மணிகண்டன் கூறியது:  தற்போது சரக்குகளை லாரிகளில் கொண்டுவர ஒரு டன்னுக்கு ரூ.1500-ரூ.2 ஆயிரம் வரை செலவாகும்.  இதே சரக்குகளை ரயிலில் கொண்டு வந்தால் ஒரு டன்னுக்கு ரூ.500 மட்டுமே செலவாகும். ரயில் போக்குவரத்து இல்லாததால் வர்த்தகம், வேளாண் விளைபொருள்கள் விற்பனையில் தேனி மாவட்டம் பின்தங்கி வருகிறது. மதுரை-போடி அகல ரயில்பாதை திட்டம் நிறைவேறினால், விவசாயம், வர்த்தகம் மட்டுமின்றி, சுற்றுலா வருமானமும் அதிகரிக்கும். எனவே, அகல ரயில்பாதை பணிகளை விரைவில் முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் கூறியது:
  நிலம் கையகப்படுத்துவதிலும், சில இடங்களில் நீதிமன்ற வழக்குகளின் காரணமாகவும் ரயில் பாதை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.   மதுரையை அடுத்த வடபழஞ்சியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதன்படி மேம்பாலம் அமைக்க  ரூ.1.5 கோடி செலவு செய்து 70 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் சுரங்கப் பாதைக்குப் பதிலாக, ரயில்வே 
கேட் அமைத்து தருமாறு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்களிடம் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களால் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. வரும் டிசம்பருக்குள் மதுரை-உசிலம்பட்டி ரயில்பாதை பணிகள் முடிக்கப்படும்.  அதன் பிறகு  
உசிலம்பட்டியில் இருந்து மீதமுள்ள 55 கிமீ ரயில் பாதைப் பணிகளை விரைவில் முடித்து 2020-க்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com