உண்ணாவிரதம் அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்
By DIN | Published on : 16th September 2018 05:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவிவரம்: கடந்த 2016-இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலின்போது பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தேன்.
அவற்றை செயல்படுத்த மக்களின் பிரதிநிதியாக இருந்து குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து திட்டங்களை நிறைவேற்றித்தர வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். அதன்படி செப்டம்பர் 20 மற்றும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையும் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், கே.பரமத்தி கடைவீதி, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக போலீஸார் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.