"நீட்' தேர்வில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: டிகே.ரங்கராஜன் எம்.பி.

"நீட்' தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த பாஜக-அதிமுக கூட்டணியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க

"நீட்' தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த பாஜக-அதிமுக கூட்டணியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பேச்சியம்மன் படித்துறை ஆறுமுச்சந்தியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் பேசியது: தமிழகத்தை ஆட்சி செய்யும் மக்களுக்கு பயனற்ற அதிமுக அரசு, தமிழகத்தின் உரிமைகளை பறித்த பாஜக மத்திய அரசு இரண்டையும் மக்களவைத் தேர்தல் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை இழந்துள்ளோம்.  மத்திய அரசு தமிழகத்தின் மீது "நீட்' தேர்வை திணித்துள்ளது.  தமிழக மக்கள் பாஜக, அதிமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திரமோடி இந்திய மக்களுக்கான பிரதமர் அல்ல. அம்பானி, அதானி உள்ளிட்ட பெரு முதலாளிகளுக்கான பிரதமர். பிரதமர் நரேந்திர மோடி தன்னிச்சையாக செயல்பட்டு அறிவித்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியில் தள்ளி விட்டுள்ளன. 
 பட்டாசுத் தொழிலில் உள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் நிற்கின்றனர். வங்கிகளில் பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல மத்திய அரசு உதவியுள்ளது. ஆனால் விவசாயம் பொய்த்ததால் கடனை செலுத்த முடியாத விவசாயிகளின் உடைமைகள் ஜப்தி செய்யப்பட்டு அவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியையும் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். எனவே நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் பாஜக அதற்கு துணையாக உள்ள அதிமுகவையும் வீழ்த்த வேண்டும் என்றார். 
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய பகுதிக்குழுச் செயலர் ஜீவா மற்றும் திமுக, விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com