தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தது காங்.-திமுக கூட்டணி: துணை முதல்வர் குற்றச்சாட்டு

தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.  

தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.  
 தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை  ஆதரித்து வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் அவர் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியது: 
கடந்த காலங்களில் யார் சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்கியது, மக்களுக்கு துரோகம் செய்தது யார் என்று எடைபோடும் தேர்தல் இது. மத்தியில் பத்தாண்டுகள் காங்கிரசுடன் திமுக அங்கம் வகித்தது. அதில் திமுக 10 மத்திய அமைச்சர்களையும் பெற்றது. அந்த அமைச்சர்கள் எல்லாம் கொலு பொம்மைகளாகத்தான் இருந்தார்கள்.  
தமிழக அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு வரிப்பணம் சென்றது.  ஆனால் தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் தோல்வியில்தான் முடியும் என்று ஜெயலலிதா உறுதியாகக்கூறினார். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி ரூ.40 ஆயிரம் கோடிகளை இத்திட்டத்துக்காக கடலில் போட்டதுதான் மிச்சம். இதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு உரிமையையும் பறி கொடுத்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி. நான் முதல்வராக பதவி வகித்தபோது, ஜல்லிக்கட்டு உரிமைக்காக மெரினா கடற்கரையில் 10 லட்சம் இளைஞர்கள் போராடினார்கள்.  அதை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு எடுத்துச்சென்றேன்.  ஒரே நாளில் நான்கு துறைகளின் ஒப்புதல் பெற்று, சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினோம். 
  திமுக குடும்பச்சண்டையில் மதுரையில் நாளிதழ் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டு 3 அப்பாவிகள் இறந்தனர். திமுக ஆட்சியில் இல்லாதபோதே பிரியாணி கடையில் தகராறு, பெண்கள் அழகு நிலையத்தில் தகராறு என பல வன்முறை சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி தேனி என்ற வரலாற்றை மக்கள் உருவாக்கித் தர வேண்டும் என்றார்.
பிரசாரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முத்துராமலிங்கம் உள்பட  நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com