அதிமுகவினரின் காலில் விழும் கலாச்சாரம் தொடர்கிறது: டி.கே.ரங்கராஜன்

தமிழகத்தில் காலில் விழும் கலாச்சாரம் தொடர்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் சனிக்கிழமை பேசினார்.


தமிழகத்தில் காலில் விழும் கலாச்சாரம் தொடர்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் சனிக்கிழமை பேசினார்.
மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து சம்மட்டிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: 
நாட்டைக் காப்பாற்றவும், அரசியல் சட்டத்தைக் காப்பாற்றவும் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக வாக்காளர்கள் மத்திய, மாநில அரசுகளைத் தோற்கடிக்க வேண்டும். 
மோடியிடம் தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு சரணாகதி அடைந்துவிட்டது. தமிழகத்தில் காலில் விழும் கலாச்சாரம் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டது என நினைத்தால் அது இன்றும் தொடர்கிறது. மோடியின் காலில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திநாத் குமார் விழுந்துள்ளார். மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியனும் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் எப்படி மக்கள் கோரிக்கைக்காக குரல் கொடுப்பார்கள்.
 நீட் தேர்வில் தமிழக மக்களை  வஞ்சித்த பிரதமர் மோடியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. மதுரை நகரில் தொழிற்சாலைகள் புதிதாக திறக்கப்படவில்லை, இருந்த பஞ்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. பிரதமர் மோடி ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. தமிழகத்திற்கு புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதில் மோடி அரசு அக்கறைகாட்டவில்லை. இத்தகைய சூழலில் மதுரை வளர்ச்சி அடையவும், மதுரையின் குரல் மக்களவையில் ஒலிக்கவும் சு.வெங்கடேசனை வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com