தேர்தல் பயிற்சி வகுப்பில் அலைக்கழிப்பு: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்

மதுரையில் தேர்தல் பயிற்சி வகுப்பில்  போதுமான அடிப்படை வசதிகள் செய்து தராமல் அலைக்கழிப்பதால், ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மதுரையில் தேர்தல் பயிற்சி வகுப்பில்  போதுமான அடிப்படை வசதிகள் செய்து தராமல் அலைக்கழிப்பதால், ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து வாக்குச்சாவடி மைய அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பயிற்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பயிற்சி வகுப்பு மிகவும் தாமதமாக  தொடங்கியுள்ளது. அதிலும் ஒரே  ஒரு வாக்குப் பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் (விவிபாட்) இயந்திரத்தைக் கொண்டு ஒவ்வொரு வகுப்புகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் பயிற்சியில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. 
மேலும் பயிற்சி மையத்தில்  உணவு, குடிநீர் வழங்கக்கோரி பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாலை 3 மணிக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் சோர்வடைந்த ஆசிரியர்கள் பலர் பயிற்சி மையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல முயன்றனர். இதில் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை மைய பொறுப்பாளர்கள் தர மறுத்து மாலை 5.30 மணி வரை இருக்க வேண்டும் என்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். 
இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறும்போது,  தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வரும் ஆசிரியர்களுக்காக தலா ரூ.150 உணவுக்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால் 
அவற்றை அதிகாரிகள் முழுமையாக செலவழிப்பது இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள கல்லூரியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படாததால் அவர்கள் உணவுத்தட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை உணவு, குடிநீர் கூட ஏற்பாடு செய்யாமல்  அலைக்கழிப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அவமதிப்பதாக உள்ளது என்றனர்.
இதுதொடர்பாக பயிற்சி மைய பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, ஆசிரியர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com