தேர்தல் பாதுகாப்புப் பணி: துணை ராணுவம், சிறப்புக் காவல்படை போலீஸார் 2,200 பேர் வருகை: மாவட்ட ஆட்சியர் தகவல்

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மதுரை மாவட்டத்துக்கு துணை ராணுவம் மற்றும்  தமிழ்நாடு சிறப்புக் காவல் போலீஸார் என மொத்தம் 2,200 பேர் வரவுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.


தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மதுரை மாவட்டத்துக்கு துணை ராணுவம் மற்றும்  தமிழ்நாடு சிறப்புக் காவல் போலீஸார் என மொத்தம் 2,200 பேர் வரவுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: மதுரை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் 13 ஆயிரத்து 545 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாள்களில் எஞ்சியவர்களுக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
காவல் துறையைச் சேர்ந்த 2,815 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டு, இதில் 1,115 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர அரசு ஓட்டுநர்கள்,  தேர்தல் பணியில் ஈடுபடும் விடியோ ஒளிப்பதிவாளர்கள்,  வாக்குச்சாவடிகளில் வெப்காமிரா இயக்குவோர் ஆகியோருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்பட உள்ளன.
 வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகம்:  மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து 94 ஆயிரத்து 890 வாக்காளர்கள் உள்ளனர்.  வாக்குப்பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அடையாள ஆவணங்களைக் கொண்டு செல்வது அவசியம். வாக்குச்சாவடி சீட்டுகள் (பூத் சிலிப்) அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்படும். இதுவரை மாவட்டத்தில் 11 லட்சத்து 44 ஆயிரத்து 279 பேருக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 
புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 570 பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வரப் பெற்று, இதுவரை 70 ஆயிரத்து 834 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணி ஓரிரு நாள்களில் நிறைவு பெறும்.
 197 வழக்குகள் பதிவு: தேர்தல் விதிமீறல் தொடர்பாக 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 31-இல் தெப்பக்குளம் பகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, காவல் துறையினர் தபால் வாக்குகள் பதிவு செய்யும் போது வாக்கு சேகரித்ததாக அளித்த புகார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
நுண்பார்வையாளர்கள் 291 பேர் நியமனம்: மதுரை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் 291 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர். 
வாக்குப்பதிவு முழுமையாக விடியோவில் பதிவு செய்யப்படும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்ட டி-சர்ட் வழங்கப்பட உள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதி செய்யப்படுகிறது.
வெளியூர் போலீஸார் 2200 பேர் வருகை:  தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக,  மதுரை மாநகரப் பகுதிக்கு எல்லைப் பாதுகாப்புப் படை (6 கம்பெனி),  மகாராஷ்டிர ஆயுதப்படை (1 கம்பெனி),  சிறப்புக் காவல் படை (9 கம்பெனி),  ஊரகப் பகுதிக்கு சிஆர்பிஎப் (3 கம்பெனி), சிறப்புக் காவல் படை (2 கம்பெனி) மற்றும் வாக்கு எண்ணும் மையத்துக்கு இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு கம்பெனி என மொத்தம் 2,200 பேர் வரவுள்ளனர்.
வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்: வாக்குப்பதிவுக்கு முன்பு 3 கட்டமாக வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். முதல் கட்டத்தில் 14 பேர் மட்டுமே செலவுக் கணக்கு தாக்கல் செய்தனர். இரண்டாவது கட்டத்தில் 23 பேர் தாக்கல் செய்துள்ளனர். எஞ்சியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com