சுடச்சுட

  

  "ஜிஎஸ்டி மூலம் மாநில வரி வருவாயை மத்திய அரசு பறித்துக் கொண்டது'

  By DIN  |   Published on : 16th April 2019 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "ஜிஎஸ்டி' மூலம் மாநில வரி வருவாயை மத்திய அரசு பறித்துக் கொண்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சௌந்தரராஜன் திங்கள்கிழமை பேசினார்.
  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உச்சப்பரம்புமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
  நாட்டில் உள்ள பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சேவை செய்துவருகிறது. சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த பாமக தலைவர் ராமதாஸை அருகில் வைத்துக்கொண்டு எட்டுவழிச்சாலையை நிறைவேற்றுவோம் என்கிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. இது குறித்து ராமதாஸ் வாய் திறக்கவில்லை. 
  நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சிறு குறுந் தொழில்களையும் அழித்து, இருக்கிற வேலை வாய்ப்பையும் பாஜக அரசு பறித்து விட்டது. மத்திய அரசில் மட்டும் 25 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன.  மேலும் "ஜிஎஸ்டி' மூலம் மாநில வரி வருவாய்க்கான வழியையும் மத்திய அரசு பறித்துக் கொண்டது.   
  "நீட்' தகுதித் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. மத்தியில் அமையவுள்ள மதச்சார்பற்ற அரசு "நீட்' தேர்வை தமிழகத்தில் புகுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளது. தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக முதல்வரை மிரட்டி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மத்திய பாஜக ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார். 
  கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.மூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai