சுடச்சுட

  

  மதுரை மாநகரில் போலீஸார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

  By DIN  |   Published on : 17th April 2019 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மாநகரில் மக்களவைத் தேர்தல், சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலுடன், சித்திரைத் திருவிழாவும் நடைபெறுவதால் தேர்தல் ஆணையம் மற்றும் மாநகர் காவல்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மற்றும் தேர்தலுக்காக 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  மதுரை மாநகரில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்காக 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திக்விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை , கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகியவற்றிற்கு  போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.  மேலும், 400 போலீஸாரும், 8 கம்பெனிகளை சேர்ந்த 749 துணை ராணுவப் படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சித்திரைத் திருவிழா மற்றும் மக்களவைத் தேர்தலுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  தேர்தல் பாதுகாப்பாக நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் மதுரை மாநகர் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பு தெப்பகுளம், பழங்காநத்தம், அண்ணாநகர், தல்லாகுளம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
  இதே போல்,  மேலூரில் தேர்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப் படைப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலூர் நகரில் முக்கிய வீதிகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் உள்ளிட்ட போலீஸாரும் இதில் பங்கேற்றனர்.
   விதுருநகர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அவனியாபுரம், திருநகர் பகுதிகளில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகர் காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் இளவரசு மற்றும் துணை ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 150 பேர் இதில்  பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai