"நீட்' தேர்வுக்கு விலக்கு அறிவித்த காங்.-திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு அறிவித்த காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

நீட் தேர்வுக்கு விலக்கு அறிவித்த காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் திருமண அரங்கில் தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் "நீட் தேர்வும் - மக்களவைத் தேர்தலும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச் செயலர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசியது: கடந்த 5 ஆண்டுகளாக கல்வியை வணிக மயமாக்குவதில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட  அரசுப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை அதிகரிக்கவோ வலுப்படுத்தவோ எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. மாறாக கல்வியை தனியார் மயமாக்குவதற்கு முன்மொழிவுகள் தான் உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதமும் சுகாதாரத்திற்கு 3 சதவீதமும் விஞ்ஞான ஆய்வுக்கு 2 சதவீதமும் ஒதுக்கப்படும். புதியதாக அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை உருவாக்குவோம். அரசுக் கல்லூரி பல்கலைக் கழகங்களுக்கு தேவையான அளவு மானியம் வழங்கப்படும்.
  பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். குடிமக்களின் சுகாதார உரிமை சட்டம், மாணவர் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்படும். நீட் தேர்வு நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துக் கொள்ளலாம் உள்ளிட்ட கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. 
எனவே, தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த வாக்காளர்கள் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழச்சியில் செயலர் உமர்பரூக், பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், முரளி, ஆண்டாள்மணியம், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com