அவதூறாக ஆடியோ பதிவு வெளியிட்ட விவகாரம்: கொட்டாம்பட்டி அருகே மீண்டும் சாலை மறியல்
By DIN | Published On : 21st April 2019 01:14 AM | Last Updated : 21st April 2019 01:14 AM | அ+அ அ- |

முத்தரையர் சமூகத்தினரை அவமதித்து செல்லிடப்பேசியில் ஆடியோ பதிவை வெளியிட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அச்சமூகத்தினர் கொட்டாம்பட்டி அருகே சனிக்கிழமை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக முத்தரையர் சமூகத்தினரை அவமதித்து செல்லிடப்பேசியில் ஆடியோ பதிவு வெளியிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அச்சமூகத்தினர், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர். இதனால், கொட்டாம்பட்டி-சிங்கம்புணரி, நத்தம்-திண்டுக்கல் ஆகிய வழித்தடங்களில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தென்மண்டல காவல் துறை தலைவர் சண்முகராஜேஸ்வரன், கொட்டாம்பட்டி பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
மீண்டும் சாலை மறியல்: இந்நிலையில், கொட்டாம்பட்டி-சிங்கம்புணரி சாலையில் பாண்டங்குடியில் சனிக்கிழமை ஏராளமானோர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.