மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்
By DIN | Published On : 21st April 2019 03:11 AM | Last Updated : 21st April 2019 03:11 AM | அ+அ அ- |

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பயிரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
உலக கல்லீரல் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், கல்லீரல் நோய்கள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிலரங்கம் நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இப்பயிலரங்கில், இந்தியாவில் இறப்பு ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான காரணமாக விளங்கும் நோய்களில் கல்லீரல் நோய் 10 ஆவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய 5 நபர்களில் 1 நபருக்கு கல்லீரலில் மிகை கொழுப்பும், 10 நபர்களில் 1 நபருக்கு கல்லீரல் கொழுப்பு நோயும் உள்ளது.
மது சார்ந்த கல்லீரல் நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், அதை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ்பி மற்றும் சி வைரஸ் ஆகியவை பாதுகாப்பற்ற உடலுறவு, ரத்தம் ஏற்றுதல், கிருமித் தொற்று கொண்ட ஊசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் கர்ப்பத்தின் போது தாயிடமிருந்து குழந்தைக்கு பரவக்கூடியது. ஹெபடைட்டிஸ்பி நோய்க்கு தடுப்பூசி போடுதல், நோய் தொற்று உள்ளவர்களை தீவிரமாகக் கண்காணித்தல் மிகவும் முக்கியமாகும் என பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இரைப்பை குடலியல் மருத்துவ ஆலோசகர் க. அழகம்மை பேசியது:
கல்லீரல் நோய் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை முக்கிய காரணமாகும். கல்லீரல் நோய்களுக்கான முக்கிய அறிகுறிகளில் சோர்வு, இயல்புக்கு மாறாக மலம் கழித்தல், பசியின்மை, அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல், திடீர் எடையிழப்பு, குமட்டல், ரத்தத்துடன் கூடிய வாந்தி மற்றும் அடிவயிற்று உபாதைகள் குறிப்பிடத்தக்க சிலவாகும் என்றார்.
அறுவைச் சிகிச்சை மற்றும் இரைப்பை குடலியல் மருத்துவரும், முதுநிலை ஆலோசகருமான ச. மோகன் பேசியது: கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதுடன் தானியங்கள், புரதச் சத்துக்கள், பால் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்புகள் கொண்ட ஒரு சமச்சீர் உணவை உண்ண வேண்டும். மது, புகையிலை மற்றும் போதைப் பொருள்களை தவிர்க்க வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். கல்லீரல் நோய் அறிகுறிகளைக் கண்டறிவதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்லீரல் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்றார்.